⭐ Review

Book review: நீலாம்பல் by குட்டி ரேவதி

★★★★4/5
March 6, 2026
Book review: நீலாம்பல் by குட்டி ரேவதி

நீலா இரண்டு பெண் குழந்தைகளைத் தூக்கிட்டு தன்னுடைய அப்பாவுக்கும் பாட்டிக்கும் தெரியாம ஊரிலிருந்து சென்னை கிளம்புவதாக கதை ஆரம்பிக்குது. நீலாவும் செவ்வந்தியும் சிறு வயது தோழிகள். வளர்ந்த பிறகு நீலா மருதனை காதலிப்பாள். செவ்வந்தியை சொந்தக்கார மாப்பிள்ளையான பாபுவுக்கு திருமணம் செய்துவைத்து விடுவார்கள். பிரசவத்தின்போது செவ்வந்தி இறந்துவிடுவாள். நெருங்கிய தோழியின் குழந்தையான நிரஞ்சனாவை வளர்க்க நீலா பாபுவைத் திருமணம் செய்துகொள்வாள். பிறகு அவளுக்கு பிறக்கும் குழந்தை மஞ்சுளா. தன்னுடைய அப்பா நிரஞ்சனாவை நடத்தும் விதம் பிடிக்காமல் சென்னையை நோக்கி புறப்படுவாள். அவள் போகும் பயணத்திலேயே அவள் பிறந்தது முதல், பூப்படைந்து, காதல் வயப்பட்டு, திருமணம் முடிந்து, குழந்தைப் பேறு பெற்று, அக்குழந்தைகள் பதின் பருவம் வரும் வரை அவளின் வாழ்க்கைப் பயணத்தை விவரித்து இருக்கிறார் ஆசிரியர்.

முதல்முறையாக காமத்தை ஒரு பெண்ணின் கோணத்தில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். காம உணர்வு அதிகரிக்கும்போது அதை அவள் கையாளும் விதம், அதற்காக அவளைக் கட்டாயப்படுத்தும்போது அவள் அதை எப்படி கையாள்கிறாள் என்பதையும் சொல்லி இருக்கிறார். நீலாவிற்கும் செவ்வந்திக்கும் இருக்கும் நெருக்கத்தையும், வாழ்க்கை ஓட்டத்தில் நீலா படும் துயரங்களையும் அவளுடைய உணர்ச்சிகளையும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.

புத்தகத்திலிருந்து,

அந்த அறையொட்டிய ஜன்னலில் அவள் என்ன பார்க்கிறாளோ அது தான் அவள் உலகமாக இருந்தது. அந்த ஜன்னல் திறக்கும் தெருவில் செல்லும் எல்லா பெண்களும் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவும் தான் மட்டும் எதையோ பறிகொடுத்ததைப் போலவும் தோன்றும்.

நனைந்த அவள் கால் தடங்கள் மொட்டை மாடியில் அங்குமிங்குமாய் பதிந்து அவள் சென்றபின்னும் உலராமல் இருந்தன. இது வழக்கமானது தான் என்றாலும் அன்று அவற்றை மிகுதியாக ரசித்தான். இறைந்து கிடந்த அவளின் கால் தடங்களுக்கிடையே அவன் மகிழ்ச்சியாக இருந்தான்.

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு நீலா இருக்கிறார். எவ்வளவு கஷ்டம் வந்தாலும், எந்த ஒரு உதவியும் இல்லாமல், காலத்தை நோக்கி நம்பிக்கையோடு வாழ்க்கையை நகர்த்த அவர்களுக்கு தெரியும். எவ்வளவு அடி விழுந்தாலும் திரும்பி எழுந்து நின்று வலிமையோடு போராடத் தெரியும். யானை பலம் கொண்ட மனதுடையவர்கள். இவர்களுக்கான புத்தகம் தான் இது. Kindle unlimitedஇல் கிடைக்கிறது.