⭐ Review

Book review: பாலங்கள் by சிவசங்கரி

★★★★4/5
April 15, 2026
Book review: பாலங்கள் by சிவசங்கரி

"பாலங்கள்" நாவலை எழுதியவர் சிவசங்கரி. 1983. வானதி பதிப்பகம்.


இது 1984 ஆம் ஆண்டு கஸ்தூரி ஸ்ரீனிவாசன் விருதைப் பெற்ற நூல். பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கை முறையையும், கால மாற்றங்களினால் மாறும் அவர்களின் உறவு முறைகளையும், மனமாற்றங்களையும் ஆசிரியர் இந்த கதையில் பதிவு செய்துள்ளார்.


காலம் அனைத்தையும் மாற்ற வல்லது என்பதற்கேற்ப இக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த காலம் தொடங்கி பெண்களே ஒவ்வொரு தலைமுறைக்கும் பாலமாக இருந்து முன்னைய தலைமுறை பழக்க வழக்கங்களையும், கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துபவர்களாக உள்ளனர். அப்பெண்களை முன்னிறுத்தி அவர்களின் பாணியில் சொன்ன கதை.


பட்டம்மா, சிவகாமு, ராஜம், மைதிலி, சாரு, அபர்ணா இவர்கள் அனைவருமே பாலமாய் இந்த கதையில் வாழ்பவர்கள்.
வயது காலத்தில் முற்போக்கு எண்ணங்களுடன் பொறுமையாய் உறவுகளைக் கையாண்ட ஒரு பெண் வயது முதிர்ந்த பின் தன்னுடைய கருத்திலேயே கட்டுண்டு பொறுமையிழந்து காணப்படுவதற்கு காரணம் என்ன என்பதை ஓரளவுக்கு நான் முன்னமே அறிந்திருந்தாலும், அதை மீண்டும் உணரவைத்தது இந்தக் கதை. நோயின் தாக்கம், முதுமையின் தனிமை, துரித கால மாற்றம், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் என்று நிறைய காரணங்கள் உண்டு.


புத்தகத்திலிருந்து,


கணவன்-மனைவி உறவு, இப்போது இன்னும் சுதந்திரமடைந்துவிட்டது. இளைய தலைமுறையினர், வித்தியாசமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள். தங்களுக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதில் தெளிவாக இருப்பவர்கள். இவர்களைப் புரிந்துகொண்டுவிட்டால், பிரச்சினை ஏதுமில்லை... என்று அடிக்கடி தனக்கு நினைவுபடுத்திக்கொண்டு, எதற்கும் கலவரப்படாமல் இருக்க முயற்சித்தாள்.


தலைமுறை தலைமுறையாகப் பெண்களின் மனதில் ஏற்படும் முதிர்ச்சி, சிந்தனை மற்றும் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை பாலங்களாக சித்தரிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி, சுமார் ஒரு நூற்றாண்டு காலப்பகுதியை இந்த நாவல் உள்ளடக்கியுள்ளது. பழமைவாதத்திலிருந்து நவீனத்திற்கு மாறும் சமூகத்தில் பெண்களின் வலிமை, கண்ணியம் மற்றும் குடும்பப் பொறுப்புகளை எடுத்துரைக்கிறது.