Book review: மாதர் திரையுலகு by ஜா. தீபா

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பெண் இயக்குனர்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.
ஜேன் காம்பியன் (நியூசிலாந்து), கிளேர் டெனிஸ் மற்றும் யமினா பெங்குய்குய் (பிரான்சு), ஈவா டுவெர்னே, கேத்ரின் பிக்லோ மற்றும் சோபியா கொப்பல்லோ (அமெரிக்கா), எசிம் உஸ்டாக்லு (துருக்கி), சாரா பாலி (கனடா), மீரா நாயர் மற்றும் அபர்ணா சென் (இந்தியா), லோன் ஸ்கெர்ஃபிக் (டென்மார்க்), மெர்சியா மெஷ்கினி (ஈரான்), லுக்ரிசியா மார்ட்டெல் (அர்ஜென்டினா), நவோமி கவேஸ் (ஜப்பான்), ஆன் ஹுய் (சீனா) இவர்களைப் பற்றிய கட்டுரைகள் அடக்கம்.
சோபியா கொப்பல்லோ தவிர மற்ற அனைவருமே முதலில் ஆவணப்படம் பிறகு குறும்படம்/ தொலைக்காட்சி தொடர் அதன் பிறகு திரைப்படம் என்றே தங்களின் பாதையை அமைத்துக்கொண்டார்கள்.
ஒவ்வொரு இயக்குனருடைய பின்புலம், பால்யம், சினிமாவிற்கு வந்த காரணம், ideology, திரைப்படங்களில் இருக்கும் ஒற்றுமை, புகழ்பெற்ற திரைப்படத்தின் மையக்கதை மற்றும் அவரின் படங்களின் பட்டியல் என்று ஒரு முழு வடிவம் கொடுத்து இந்த கட்டுரைகளை எழுதியுள்ளார் ஆசிரியர்.
திரைப்பட இயக்குநராக இருப்பதே ஒரு பெரிய சவால் அதிலும் பெண் இயக்குநராக இருப்பது இன்றைய நிலையிலுமே மிகச் சவாலான வேலை. அதைத் திறம்பட செய்து அதற்காக உலக அளவில் அடையாளம் கிடைக்கும்போது ஏற்படும் சந்தோஷம் சொல்லில் அடங்காதது. ஒவ்வொரு இயக்குநரின் கதையுமே என்னை மிகவும் கவர்ந்தது.
“ஒரு ஆணைக்காட்டிலும் தன்னை நிரூபித்தல் என்பது பெண்களுக்கு இங்கு சவாலானது. ஏனெனில், பெண் என்பதால் எந்தச் சலுகையும் தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்காக, நான் கடினமான மேற்தோலைப் போர்த்தியாக வேண்டியிருந்தது”
"ஒவ்வொரு மனிதருக்குள்ளும் போராட்டக்களம் ஒன்று விரிந்துகிடக்கிறது. அதில் தனக்குத்தானே மனிதன் யுத்தம் செய்து கொண்டிருக்கிறான். உணர்ச்சிகளுக்கிடையேயான யுத்தத்தில் அவன் எடுக்கிற தீர்மானங்கள்தான் அவனை வழிநடத்துகின்றன. அதுவே, அவன் வாழ்க்கையாகிறது”
“கலைஞர்கள் யாவரும் அடிப்படையில் ரசனையாளர்களாகத் தானே இருக்கமுடியும்”
ஆசிரியர் இந்தக் கட்டுரைகளை எழுதுவதற்காக எடுத்த முயற்சிகளை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. ஒவ்வொரு இயக்குநரின் படைப்புகளை பார்த்து அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய இதர தகவல்களை சேகரித்து அதை தொகுப்பாக்கி ஆர்வம் குறையாமல் வாசிக்கும் வகையில் எழுதியது பாராட்டப்பட வேண்டிய விஷயம். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பெண் இயக்குனர்களைப்பற்றி தெரிந்துகொள்ள வாசிக்க வேண்டிய புத்தகம் இது.