Book review: தண்ணீர் by அசோகமித்திரன்

1970களில் சென்னையில் இருந்த தண்ணீர்ப் பஞ்சத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். முக்கிய கதாபாத்திரங்கள் - ஜமுனா, சாயா மற்றும் டீச்சரம்மா. சினிமா நடிகையாகும் கனவில் திருமணமான பாஸ்கர் ராவை நம்பி ஏமாறும் ஜமுனா, மகன் முரளியை மாமா வீட்டில் தங்கவைத்துவிட்டு மிலிட்டரியில் வேலைப் பார்க்கும் கணவனின் வருகைக்காக காத்திருக்கும் சாயா மற்றும் நோயுற்ற கணவனையும், வார்த்தைகளால் வன்மத்தை கக்கும் மாமியாரையும் சகித்துக்கொண்டு வாழும் டீச்சரம்மா.
ஜமுனாவை சுற்றியே இந்தக் கதை சுழல்கிறது. தான் வாழும் முறையினால் அதனால் ஏற்படும் குற்றவுணர்ச்சியினால் தான் சிறுமைப்படுத்தப்படுவதாகவும், சமூகத்தில் தனக்கென்று ஒரு அடையாளம் இல்லையென்றும், தன் மீது அன்பு செலுத்த யாரும் இல்லையென்றும் நினைத்துக்கொண்டு அவள் எடுக்கும் தவறான முடிவு, அதிலிருந்து அவள் எப்படி மீண்டு வருகிறாள் என்பதே கதை.
தண்ணீர்ப் பஞ்சத்தை மிக நுணுக்கமாக விவரித்துள்ளார். அதுவே ஒரு குறியீடாகவும் ஜமுனாவின் வாழ்க்கைப் புழக்கத்தை நமக்கு சொல்கிறது. குடிநீர்க் குழாயில் சாக்கடைத் தண்ணீர் வருவதே அதனின் உச்சம். தன்னுடைய பிரச்சினைகளுக்குள்ளாகவே உழன்று கொண்டு இருந்தால் வாழ்க்கையில் வெறுமையே மிஞ்சும். அதைக் கடந்து அடுத்தவருக்கு ஏதேனும் உதவியாக இருக்க முயலவேண்டும். டீச்சரம்மா ஜமுனாவிடம் பேசும் இடம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு வயதான பிராமண மூதாட்டி வைராக்கியமாக தண்ணீரைக் கொட்டும் காட்சி ஜமுனாவிற்கு தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை உணரும்படியாண தருணம். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கிளாசிக் நாவல்.
புத்தகத்திலிருந்து,
எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் சில அந்தரங்கங்கள் ஒருவருக்கொருவர் தெரியாத வரையில்தான் சகித்து கொள்ள முடிகிறது.