Book review: அன்பின் நிமித்தங்கள் by யாத்திரி

யாத்திரி கார்த்திக் அவர்களை என்னோட நெருங்கிய தோழி ஜரினா தான் எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாங்க. அவரோட முகநூல் பக்கத்தை follow பண்ண ஆரம்பிச்சேன். அவரோட பதிவுகள் மேல எனக்கு ஈர்ப்பு வர ஆரம்பிச்ச காலம் அது. அவரோட சிறுகதை ஒண்ணு ஆனந்த விகடன்ல வாசிச்சிருக்கேன். இந்த வருஷம் என்னுடைய தோழி எனக்கு யாத்திரியோட 9 புத்தகங்களையும் பிறந்தநாள் பரிசா கொடுத்தாங்க. சந்தோஷமான தருணம். அதைத் தொடர்ந்து தான் நான் அன்பின் நிமித்தங்கள் வாசிச்சேன்.
யாத்திரியோட "அன்பின் நிமித்தங்கள்" புத்தகத்தை வாசிச்சதும் எனக்கு தோனின விஷயம் என்னனா இதை ஏன் நான் கல்லூரியில இருந்தப்போ வாசிக்கலைனு. அப்புறமா தான் தெரிஞ்சது இந்தப் புத்தகம் 2021ல தான் வெளியாகி உள்ளது. நான் 2014லயே முதுகலை முடிச்சுட்டேன்.
ஆண்-பெண் உறவுகளைப்பத்தி பேசுறதுக்கு எனக்கு வயசு ஆயிருச்சோன்னு தோணிச்சு. இந்தக் கவிதைகளை படிக்கும்போது ஏற்பட வேண்டிய இயல்பான கிளர்ச்சி எனக்கு ஏற்படலை. அதெல்லாம் தாண்டி ரொம்ப தூரம் வந்த மாதிரி ஒரு ஃபீல். இதுக்கு பல காரணங்கள் உண்டு. பல வருஷமா நிலையான உறவில் இருப்பது, காதலை முழுக்க அனுபவிச்சு பல வருஷம் ஆனது, வயதானதுனால ஏற்பட்ட மனமுதிர்ச்சி, 3 வயசு மகளுக்கு முழுநேர அம்மாவா இருக்கிறது. இதனால தான் என்னால இந்த உச்ச உணர்ச்சிகளை புரிஞ்சுக்க முடிஞ்சது ஆனா அனுபவிக்க முடியலைனு நினைக்கிறேன். எனக்குப் பிடித்த கவிதைகள் பல இருந்துச்சு இதுல. ஆனா இந்தப் புத்தகத்தோட முக்கியமான அம்சம் அது மட்டும் இல்ல. காதல், ஊடல், கோபம், ஆதங்கம், பிரிவு, கூடல், அப்புறம் நட்புனு நிறைய அம்சங்கள் இருக்கு.
பெண் மேல காட்டப்படுற வன்முறைகள் அதிகமாக ஆயிட்டு இருக்கிற காலகட்டத்துல, தன்னோட கவிதைகளால அதெல்லாம் குறையணும்னு பிரயத்தனப்படுற அந்த மனசுக்காகவே யாத்திரி கார்த்திகைப் பாராட்டலாம்.
எந்த இடத்துலயும் பெண் மேல கோபமோ, வெறுப்போ வராத மாதிரி இந்தக் களத்துல எழுதுறது சிரமம். ஆனா அது துளி கூட தெரியாத மாதிரி எழுதி இருக்காரு. இந்த ஒரு காரணத்துக்காகவே நான் அவரோட எல்லா புத்தகங்களையும் வாசிக்கலாம்னு இருக்கேன்.
பிடித்த கவிதைகள்,
நீ திரும்பி வரவேண்டுமென்று தான் உளவிருப்பம், மீண்டும் வந்துவிடுவாய் எனில் உனக்கென்ன பெருமை இருக்கப்போகிறது? திரும்பவே கிடைக்காதவை தான் அதிசயத்தைத் தக்கவைக்கும். போனவள் போனவளாகவே இரு, நீயென் அதிசயம்.
எனக்கு யாருமே வேண்டாமென்று யாரிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்களோ, அவர்கள் தான் உங்களுக்கு எல்லாமுமாக இருப்பவர்கள்.
இழக்காமல் வேறெப்படித்தான் அறியமுடியும்! ஒருவர் நம் வாழ்வில் பெற்றிருந்த முக்கியத்துவத்தை.
ஒரு நல்ல பாடலைக் கேட்டால் ஓர் அழகிய கவிதையை வாசித்தால் கண்கவர் ஓவியமொன்றைப் பார்த்தால் அதிகாலையில் மழை தூறினால் மாலைவேளை தாண்டியும் மஞ்சள்வெயில் காய்ந்தால் என்னால் யாரேனும் சிரித்தால் யாராலேனும் நான் அழுதால் எனக்கு உன்னைத் தேடும்.
உன் அன்பிற்குள் இருக்கவும் தெரியவில்லை வெளியேறிச் செல்லவும் துணிவில்லை நீ வேண்டும் என்பது மட்டும் புத்திக்குள் உறைந்து கிடக்கிறது.
விரும்பியோ விரும்பாமலோ, தற்காத்துக் கொள்ள எல்லோர் கையிலும் கூரிய ஆயுதமொன்று தரப்பட்டு இருக்கிறது, அறியாமல் கூட யாரையேனும் காயப்படுத்தி விடக் கூடுமென அஞ்சுபவர்கள் ஆயுதத்தை திருப்பிப் பிடித்துக் கொள்கிறார்கள்.
தோற்று நிற்கையில் விதிர்த்து நான் புதைந்தழும் கரங்கள் உனது.
ஒளிந்து விளையாட ஆரம்பித்துவிட்ட குழந்தை, தாய் பரிதவித்துத் தேடுவதைக் கண்டு சிரிக்கிறது. அங்கிருந்தே தொடங்கிவிட்டது அன்பின் பதட்டத்தை ரசிக்கும் போதை.
பேசவே கூடாதெனும் வைராக்கியமெல்லாம் பிரியங்களின் குரல் கேட்கும் வரைதான்.