Book excerpt: முதலில் அமரும் பறவை by கல்யாண்ஜி

எனக்குப் பிடித்த கவிதைகள்,
* 79 வயது முடியப் போகிறது.
எத்தனையோ முறை அருவியில் குளித்தாயிற்று.
இதுவரை ஒரு தடவை கூட
மங்குஸ்தான் பழம் சாப்பிட்டதில்லை.
வாழ்க்கை என்பது சாப்பிடாத ஒரு மங்குஸ்தான் பழம்.
* உச்ச மழை நாளில் உதிர்ந்து கிடக்கும்
பன்னீர்ப் பூக்கள் பார்த்தபடி நிற்கும்
இதே நிலையில் நான் கல்லாகிவிட்டால்
நாளை அதிகாலை எந்தப் பறவை வந்து முதலில் அமரும்?
* மறுமுறை அணிவதற்கு எடுத்த போது
கால்சராயில் அப்பியிருந்த உப்பு மணல் உதிர்ந்தது.
ஒரு கடற்கரை இதைவிட நேர்த்தியாக
எப்படித் தன்னுடைய ஒரு அலையை
ஞாபகப் படுத்திக் கொள்ளும்?
* நான் பாடலாசிரியன் அல்ல.
இசை அமைப்பாளன் அல்ல.
இந்த வாழ்வு ஒரு சில வரிகளை என்னிடம் திணிக்கிறது.
ஒரு சிறு இசையை எனக்குச் சொல்லித் தருகிறது.
நான் கடைசி வரை அதே வரிகளை மட்டும்
அதே பண்ணில் பாடி அலைகிறேன்
பாதாம் மரம் பூத்ததும்
குரவையிடும் சிறுபறவைகளாக.